உலகம்
கோப்பு படம்

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Published On 2022-01-17 05:13 GMT   |   Update On 2022-01-17 05:17 GMT
வடகொரியா மேலும் 2 ஏவுகணைகளை சோதித்து பார்த்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

பியாங் யாங்:

வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் கடந்த 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் தங்களது அணு ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்தார்.

அதற்கு பதிலாக தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்று அவர் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்புடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.

வடகொரியா தங்களது அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்ட பிறகுதான் பொருளாதார தடைகளை நீக்க முடியும் என்று டிரம்ப் திட்டவட்டமாக கூறி விட்டதால் இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவிடம் ஒப்புக் கொண்டதை மீறி மீண்டும் அணு ஆயுத திட்டங்களை தொடங்கப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்து வந்தது.

மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒலியைபோல் 5 மடங்கு வேகமான ஏவு கணையை 3-வது முறையாக கடந்த 11-ந்தேதி பரிசோதித்து பார்த்ததாக வடகொரியா அறிவித்தது.

அதனை கண்டிக்கும் வகையில் வடகொரியா அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா மேலும் 2 ஏவுகணைகளை சோதித்து பார்த்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியாவின் வடக்கு பியாங்கன் மாகாணத்தில் 2 ஏவு கணைகள் கடந்த 14-ந்தேதி ஏவி பரிசோதிக்கப்பட்டன. 11 நிமிட இடை வெளியில் இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. அதிகபட்சமாக 36 கி.மீ. உயரத்துக்கு சென்ற அந்த ஏவுகணைகள் 430 கி.மீ. தூரம் பாய்ந்து கடலில் விழுந்தன” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... தினசரி பாதிப்பு குறைந்தது- நாடு முழுவதும் புதிதாக 2.58 லட்சம் பேருக்கு கொரோனா

Tags:    

Similar News