செய்திகள்
கோப்பு படம்

உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே காரணம் - பாகிஸ்தான் மந்திரி புலம்பல்

Published On 2019-12-04 11:21 GMT   |   Update On 2019-12-04 11:21 GMT
இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததாலேயே பாகிஸ்தானில் தக்காளி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணம் என அந்நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் கடுமையான கோபமும், விரக்தியும் அடைந்த பாகிஸ்தான் அரசு உடனடியாக இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வர்த்தக ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. 

இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவிவரும் நிலையில் இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்துவிட்டனர். 

இதனால் பாகிஸ்தானில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 



இந்நிலையில், பாகிஸ்தானில் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை துண்டித்ததுதான் காரணம் என அந்நாட்டு பொருளாதார விவகாரங்கள் துறை மந்திரி ஹமத் அசார் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்,'நாட்டில் நிலவிவரும் உணவு பொருட்கள் மீதான விலை உயர்வுக்கு இந்தியாவுடன் வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே முக்கிய காரணம். 

மேலும், பருவநிலை மற்றும் இடைத்தரகர்கள் காய்கறிகளை பதுக்கி வைப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்’ என அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News