செய்திகள்

ஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல்- பிரதமர் அறிவிப்பு

Published On 2019-04-11 05:51 GMT   |   Update On 2019-04-11 05:51 GMT
ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். #AustralianElections #ScottMorrison
சிட்னி:

ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர்.
கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது பிரதமருக்கான  போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். ஸ்காட் மாரிசனுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததால், பாராளுமன்ற தேர்தல் வரை அவருக்கு சிக்கல் இல்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று அறிவித்துள்ளார்.



இந்த தேர்தலில் லிபரல் கட்சியின் தேர்தல் பிரசார யுக்தி மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைப் பொருத்து அந்த கட்சி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா? என்பது தெரியவரும். பருவநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக எதிரொலிக்கும்.

“அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வளமாக வாழும் வகையில் நாட்டின் வலுவான பொருளாதாரத்தை இந்த தேர்தல் தீர்மானிக்கும். உலகின் மிகச்சிறந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால், உங்களின் வருங்கால பாதுகாப்பு வலுவான பொருளாதாரத்தையே சார்ந்துள்ளது” என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் ஒருசில வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வருவதில்லை. கடைசியாக நடந்த பொதுத்தேர்தலில் 95 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. #AustralianElections #ScottMorrison

Tags:    

Similar News