செய்திகள்

மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையிலா அடைப்பீர்கள்? - லண்டன் நீதிபதி கேள்வி

Published On 2019-03-31 00:37 GMT   |   Update On 2019-03-31 00:37 GMT
மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையில் அடைப்பீர்களா என லண்டன் நீதிபதி இளகிய மனதுடன் கேள்வி கேட்டார். #NiravModi #VijayMallya
லண்டன்:

பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் அவரது ஜாமீன் மனு 2-வது முறையாக நேற்று முன்தினமும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, இந்தியா சார்பில் ஆஜரான கிரவுண் சட்டப்பணிகள் குழு வக்கீல்களிடம் பேசிய நீதிபதி எம்மா அர்பத்னோட், நிரவ் மோடியை நாடு கடத்தினால் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வக்கீல், ‘ஏற்கனவே விஜய் மல்லையாவுக்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார்’ என்று கூறினார். உடனே நீதிபதி, ‘மல்லையாவுக்காக தயாராகும் சிறையின் வீடியோவை ஏற்கனவே பார்த்தோம். அதில் இடமும் இருந்தது. இருவரையும் ஒரே சிறையிலா அடைப்பீர்கள்?’ என இளகிய மனதுடன் கேட்டார்.

முன்னதாக, நிரவ்மோடிக்கு வயதான பெற்றோர் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயிலும் மகன் இருப்பதாகவும், அத்துடன் அவர் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருவதாகவும் கோர்ட்டில் கூறிய அவரது வக்கீல் கிளேர் மோண்ட்கோமெரி, எனவே அவர்களை பராமரிப்பதற்காக நிரவ் மோடியை ஜாமீனில் விட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனாலும் நீதிபதி அவரது வாதத்தை ஏற்கவில்லை.

இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே அதை முன்வைத்து இந்த வாதத்தை நிரவ் மோடி தரப்பு எடுத்து வைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NiravModi #VijayMallya
Tags:    

Similar News