செய்திகள்

மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க அமெரிக்கா புதிய முயற்சி

Published On 2019-03-28 04:43 GMT   |   Update On 2019-03-28 04:43 GMT
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை வைக்க அமெரிக்கா புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. #MasoodAzhar #UNBlacklist
வாஷிங்டன்:

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி நடந்த தற்கொலைத் தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. ஆனால் சீனா தனது வீட்டோ அதிகாரததைப் பயன்படுத்தி, இந்த முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.



இந்நிலையில், மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு வரைவு தீர்மானத்தை அனுப்பி உள்ளது.

இந்த தீர்மானம் நிறைவேறினால் மசூத் அசாருக்கு எதிராக ஆயுத தடை, பயண தடை விதிக்கப்படுவதோடு அவரது சொத்துக்களும் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #MasoodAzhar #UNBlacklist

Tags:    

Similar News