செய்திகள்

மூடப்பட்ட வான்வெளியை ஒரு மாதத்துக்கு பின்னர் திறந்தது பாகிஸ்தான்

Published On 2019-03-27 08:55 GMT   |   Update On 2019-03-27 08:55 GMT
இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து தனது நாட்டின் வான்வெளியில் விமானங்கள் பறக்க விதித்திருந்த தடையை பாகிஸ்தான் இன்று விலக்கியது. #Pakistanopens #Pakistanairspace
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த மாதம் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல விமான நிலையங்களை பாகிஸ்தான் அரசு அவசரமாக மூடியது.

இதேபோல் சில நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களும், உள்நாட்டு விமான நிலையங்களும் மூடப்பட்டன. பிப்ரவரி மாதம் 27-ம் தேதியில் இருந்து சில நகரங்களின் வான் எல்லை வழியாக வெளிநாட்டு விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர், சில முக்கிய விமான நிலையங்கள் வழியாக மிக குறைவான விமானச் சேவைகள் இயக்கப்பட்டன.

சுமார் ஒருமாத இடைவெளிக்கு பின்னர் இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா ஆகிய விமான நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கவும், புறப்பட்டு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.



இதைதொடர்ந்து, தங்கள் நாட்டின் வான் எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு  விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு இன்று திரும்பப் பெற்றது. எனினும், நடுவழியில் இறங்கும் விமானங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

பாதுகாப்பு கருதி பாங்காக், கோலாலம்பூர், புதுடெல்லி ஆகிய பகுதிகளில் இருந்துவரும் விமானங்கள் தற்போதைக்கு இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #Pakistanopens #Pakistanairspace
Tags:    

Similar News