செய்திகள்

தென்கொரிய பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி சிலை- மோடி திறந்து வைத்தார்

Published On 2019-02-21 08:35 GMT   |   Update On 2019-02-21 10:00 GMT
தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலையை திறந்து வைத்தார். #ModiInSouthKorea #ModiInSeoul #ModiKoreaVisit
சியோல்:

இந்திய பிரதமர் மோடி தென்கொரியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை தென் கொரிய தலைநகர் சியோல் போய்ச் சேர்ந்தார்.

பிரதமர் மோடிக்கு சியோல் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மோடி தங்கி இருந்த ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் அவரைச் சந்தித்து வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், சியோலில் உள்ள புகழ்பெற்ற யோக்சி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் ஐநா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான் கிமூன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



நிகழ்ச்சியில் பேசிய மோடி, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், அவரது சிலையை திறந்து வைத்தது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று குறிப்பிட்டார். மேலும், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் மனிதகுலம் எதிர்கொண்டுள்ள இரண்டு பெரிய சவால்கள் என்றும் கூறினார்.

மகாத்மா காந்தியின் போதனைகளை சுட்டிக்காட்டி பேசிய மோடி, உலகின் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இந்த போதனைகள் உதவும் என்றார்.

பிரதமர் மோடி தனது பயணத்தின் போது இந்திய-தென்கொரியா இடையே தொழில், வர்த்தகம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மூன் ஜாயியுடன் பேச்சு நடத்துகிறார். புதிய ஒப்பந்தங்களிலும் இரு நாட்டு தலைவர்கள் கையெழுத்திடுகிறார்கள்.

இந்த சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களுக்காக அவருக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது தென்கொரிய அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடி தென்கொரியா செல்வது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டு மோடி தென்கொரியா சென்று அந்நாட்டுடன் தொழில், வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தினார். #ModiInSouthKorea #ModiInSeoul #ModiKoreaVisit
Tags:    

Similar News