செய்திகள்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு திடீர் பயணம்

Published On 2019-01-08 18:35 GMT   |   Update On 2019-01-08 18:35 GMT
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றார். #NorthKorea #KimJongUn #China
பீஜிங்:

வடகொரியாவுக்கு நெருங்கிய மற்றும் முக்கிய கூட்டாளியாக சீனா மட்டுமே விளங்கி வருகிறது. தூதரக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு, சீனா வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு சென்றார். ரெயில் மார்க்கமாக ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பயணத்துக்கு பின்னர் தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் கிம் ஜாங் அன் 2 முறை சீனாவுக்கு சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்த நிலையில் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எந்த நேரத்திலும் சந்திக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி 2-வது உச்சி மாநாட்டுக்கான தேதி மற்றும் இடம் குறித்து இருநாட்டு அதிகாரிகளிடையே தீவிர ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கிம் ஜாங் அன் திடீர் பயணமாக நேற்று சீனா சென்றார். சீன அதிபர் ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக அவர் சீனா சென்றிருப்பதாக வடகொரிய அரசு ஊடகமான கே.என்.சி.ஏ. தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் அன் தனது மனைவி ரீ சோல்-ஜூ, அவரது வலதுகரமாக விளங்கும் யோங்-ஜோல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ரெயிலில் சீனாவுக்கு புறப்பட்டார். அந்த ரெயில் நேற்று சீன தலைநகர் பீஜிங் சென்றடைந்தது.

இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததாகவும், ரெயில் நிலையத்தில் கிம் ஜாங் அன்னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 நாட்கள் சீனாவில் தங்கி இருக்கும் கிம் ஜாங் அன், அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

கிம் ஜாங் அன்னின் திடீர் சீன பயணம் டிரம்ப் - கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

வர்த்தக பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பிரதிநிதிகள் சீனாவில் முகாமிட்டு இருக்கும் நிலையில், கிம் ஜாங் அன் அங்கு பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  #NorthKorea #KimJongUn #China 
Tags:    

Similar News