செய்திகள்

வங்காளதேசம் தேர்தல் கலவரத்தில் 5 பேர் பலி

Published On 2018-12-30 08:15 GMT   |   Update On 2018-12-30 08:15 GMT
வங்காளதேசம் நாட்டு பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே வெடித்த மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். #5killed #Bangladesh #Bangladeshelection #Bangladeshelectionclash #AwamiLeague #BNPsupporters
டாக்கா:

வங்காளதேசம் நாட்டு பாராளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.  பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  

10.41 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க 40,183 மையங்களில் நடைபெறும் இன்றைய வாக்குப்பதிவில் பெண்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இன்று காலை பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா சிட்டி கல்லூரியில் முதல்நபராக நின்று வாக்களித்தார்.


தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்ததால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 6 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் ஊழல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே சில இடங்களில் வன்முறையும் மோதலும் ஏற்பட்டது.

இந்த மோதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். வன்முறை வெடித்த பகுதிகளுக்கு கூடுதலாக போலீசாரும் ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. #5killed #Bangladesh #Bangladeshelection #Bangladeshelectionclash #AwamiLeague #BNPsupporters
Tags:    

Similar News