செய்திகள்

அமெரிக்காவின் ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் திடீர் ராஜினாமா

Published On 2018-12-21 04:40 GMT   |   Update On 2018-12-21 04:40 GMT
அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். #USDefenceSecretary #JimMattisResigns
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி வகித்து வந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பல அதிகாரிகள் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் (வயது 68) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அதிபர் டிரம்புக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பதவி விலக இதுவே சரியான தருணம் என்றும், அதிபர் டிரம்ப் தகுதியான ஒரு தலைவரை ராணுவ மந்திரியாக நியமிப்பதற்கு ஏதுவாக பதவி விலகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தனது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும், இந்த இடைப்பட்ட காலம் புதிய மந்திரியை தேர்வு செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறுநாளே, ராணுவ மந்திரி பதவியில் இருந்து ஜிம் மேட்டிஸ் பதவி விலகியிருக்கிறார். எனவே, டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜிம் மேட்டிஸ் ராஜினாமா கடிதம் அனுப்பியதையடுத்து, பிப்ரவரி மாதம் அவர் ஓய்வு பெற உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் ஜிம் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது பதவிக்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் பாராட்டியுள்ளார். #USDefenceSecretary #JimMattisResigns

Tags:    

Similar News