செய்திகள்

இலங்கையில் மீண்டும் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமராக பதவி ஏற்றார்

Published On 2018-12-16 10:23 GMT   |   Update On 2018-12-16 12:40 GMT
இலங்கையில் கடந்த 51-நாட்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #RanilWickremesinghe #PrimeMinister

கொழும்பு:

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் மைத்ரி பால சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால் அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாதது என அறிவித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கியது சட்ட விரோதம் என்றும் தீர்ப்பு அளித்தது.

அதன் பின்னர் பாராளுமன்றத்தில் ராஜபக்சே மீது எதிர்க்கட்சிகள் 2 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெற்றனர். இருந்தும் அவரை பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா நீக்க வில்லை. இந்த நிலையில் பிரதமர் பதவியில் ராஜபக்சே தொடர்ந்து நீடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

இதனால் அதிபர் சிறிசேனாவுக்கும், ராஜபக்சேவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.

அதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக சிறிசேனா அறிவித்தார்.

பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. அதற்காக ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதி அலுவலகம் வந்தார். அவருடன் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம்.பி.க்களும், கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோரும் வந்து இருந்தனர். உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே சென்றனர்.

காலை 11.16 மணியளவில் ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கையில் கடந்த 51 நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்தன.

ரணில் விக்ரமசிங்கேவை தொடர்ந்து புதிய மந்திரிகள் நாளை (17-ந்தேதி) பதவி ஏற்கிறார்கள். 30 பேர் மந்திரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

அவர்களில் 6 பேர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இதன்மூலம் ரணில் விக்ரமசிங்கே கூட்டணி அரசு அமைக்கிறார். #RanilWickremesinghe #PrimeMinister

Tags:    

Similar News