செய்திகள்

நாடு கடத்தும் தீர்ப்பினால் அதிர்ச்சி அடையவில்லை - விஜய் மல்லையா பேட்டி

Published On 2018-12-10 15:34 GMT   |   Update On 2018-12-10 15:34 GMT
என்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். #CBI #VijayMallya #VijayMallyaextradition
லண்டன்:

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி எம்மா அர்புத்னாட், மோசடி, சதி திட்டம் மற்றும் கள்ளத்தனமான பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக மல்லையாவுக்கு எதிரான நம்பகமான முகாந்திரங்கள் இருப்பதால் அவரை நாடு கடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தார்.

இந்தியாவின் மும்பை நகரில் உள்ள ஆர்த்தர் சாலை சிறையில் விஜய் மல்லையாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வசதி கொண்ட அறை ஒதுக்கீடு தொடர்பாகவும் நீதிபதி திருப்தி தெரிவித்தார்.
 
பிரிட்டன் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்காக இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ள நிலையில், லண்டன் கோர்ட் அளித்த இந்த தீர்ப்பினால் நான் அதிர்ச்சி அடையவில்லை என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு வெளியானதும் லண்டனில் உள்ள கோர்ட் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மல்லையா, 'இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பாக எனது வழக்கறிஞர்கள் குழு முழுமையாக ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை அளிப்பார்கள். 

அதன் அடிப்படையில் அடுத்த செயல்பாடு தொடர்பான முடிவை எடுப்பேன். இந்த தீர்ப்பினால் நான் அதிர்ச்சி அடையவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.

இன்று அளிக்கப்பட்டுள்ள நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த 28 நாட்களுக்குள் அவர் அங்கிருந்து வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. #CBI #VijayMallya #VijayMallyaextradition
Tags:    

Similar News