செய்திகள்

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-12-10 12:37 GMT   |   Update On 2018-12-10 12:39 GMT
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CBIEDjointteam #VijayMallya #VijayMallyaextradition
லண்டன்:

இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மல்லையாவுக்கு எதிராக சில செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது.

இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன.

இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் சென்றிருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி எம்மா அர்புத்னாட், விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார்.



இதுதொடர்பாக முடிவெடுக்க பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இந்த தீர்ப்பின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் அடுத்தகட்ட முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவுக்காக பாதுகாப்புமிக்க அறை ஒதுக்கீடு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. #CBIEDjointteam #VijayMallya #VijayMallyaextradition
Tags:    

Similar News