செய்திகள்

வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தேர்தலில் போட்டியிட தடை

Published On 2018-11-27 14:37 GMT   |   Update On 2018-11-27 14:37 GMT
ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டிசம்பர் 30-ம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #Bangladeshicourt #KhaledaZia #Bangladeshelections
டாக்கா:

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா(73) ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு வழக்கிலும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர் டாக்கா நகரில் உள்ள தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வங்காளதேசம் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 30-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வங்காளதேசம் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரும் இரு ஊழல் வழக்குகளில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவருமான கலிதா ஜியா நீதிமன்றத்தை நாடி இருந்தார்.



இந்த தண்டனைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கலிதாவின் வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டாக்கா உயர்நீதி மன்றம், தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தாலும் இரண்டாண்டுகளுக்கு அதிகமான காலம் சிறைவாசம் விதிக்கப்பட்ட ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியாது என்று அறிவித்து விட்டது. #Bangladeshicourt #KhaledaZia #Bangladeshelections
Tags:    

Similar News