செய்திகள்

லிபியாவில் இருந்து தாமாக வெளியேறிய 174 சட்டவிரோத குடியேறிகள்

Published On 2018-11-23 04:55 GMT   |   Update On 2018-11-23 04:55 GMT
லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 174 பேர் தாங்களாக முன்வந்து சொந்த நாடான நைஜீரியாவுக்கு திரும்பி உள்ளனர். #MigrantsDeported #Libya
திரிபோலி:

வறுமை, உள்நாட்டு சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர். இதற்காக ஆபத்தான மத்திய தரைக்கடல் பகுதியில் படகுகளில் பயணிக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். அவர்களை லிபிய பாதுகாப்பு படையினர் மீட்டு தங்கள் பகுதிக்கு கொண்டு வந்து முகாம்களில் தங்க வைக்கின்றனர்.

அதேபோல் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சிக்கும் நபர்களும் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் நிவாரண முகாம்கள் நிரம்பி வழிந்தன.



இதையடுத்து, லிபியாவில் சிக்கித் தவிக்கும் சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) செய்தது. இதன்மூலம் பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

அவ்வகையில் நேற்று நைஜிரியாவைச் சேர்ந்த 174 பேர் லிபியாவில் இருந்து தாயகம் திரும்பியதாக ஐஓஎம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 32 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றிய அறக்கட்டளை நிதி உதவி பெற்று தங்கள் நாடுகளுக்கு திரும்பி உள்ளதாகவும் ஐஓஎம் கூறியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகளை அவர்களின் நாடுகளுக்கு ஐஓஎம் திருப்பி அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. #MigrantsDeported #Libya

Tags:    

Similar News