செய்திகள்

கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோ டேப்பை கேட்க விரும்பவில்லை - டிரம்ப் தகவல்

Published On 2018-11-19 18:49 GMT   |   Update On 2018-11-19 18:49 GMT
பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோ டேப்பை கேட்க விரும்பவில்லை என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். #KhashoggiMurder #DonaldTrump
வாஷிங்டன்:

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கடந்த மாதம் 2-ந் தேதி துருக்கியில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணியாற்றி வந்ததால், இந்த விவகாரத்தை அமெரிக்கா கடுமையாக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது.

கசோக்கி கொலை சம்பவம் அடங்கிய ஆடியோ டேப்பை துருக்கி அரசு கைப்பற்றியது. இதை பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அளித்து இருப்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.



இந்த டேப்பை கேட்டீர்களா? என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் நேற்று முன்தினம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘அந்த டேப்பை நான் கேட்க விரும்பவில்லை. ஏனெனில் அது ஒரு துயரமான டேப். அது கொடூரமானது’ என்று கூறினார்.

மேலும் இந்த கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், தன்னிடம் கூறியதாக தெரிவித்த டிரம்ப், இதையே மேலும் பலரும் குறிப்பிடுவதாகவும் கூறினார்.  #KhashoggiMurder #DonaldTrump 
Tags:    

Similar News