செய்திகள்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை பதவி நீக்கம் செய்த டிரம்ப் மனைவி

Published On 2018-11-15 07:57 GMT   |   Update On 2018-11-15 07:57 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலினியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்த தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை வெள்ளை மாளிகை பதவி நீக்கம் செய்துள்ளது. #MelaniaTrump #WhiteHouse #MiraRicardel
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக முன்னர் பராக் ஒபாமா பதவி வகித்தபோது அந்நாட்டின் வெளியுறவு துறைக்கான ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த மிரா ரிக்கார்டெல். அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்ட்டன் என்பவருக்கு உதவியாக தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக கடந்த மே மாதம் மிரா ரிக்கார்டெல் நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடந்த மாதம் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது மெலனியாவின் உதவியாளர்களுக்கும் மிரா ரிக்கார்டெலுக்கும் இடையில் சச்சரவு ஏற்பட்டதாக தெரிகிறது.



தேசிய பாதுகாப்பு தலைமை ஆலோசகர் ஜான் போல்ட்டனிடம் தனக்குள்ள நெருக்கம் மற்றும் செல்வாக்கால் மிரா ரிக்கார்டெல் வரம்புமீறி நடந்து கொள்வதாக கருதிய மெலனியா ஆத்திரமடைந்தார். நீருபூத்த நெருப்பாக அவருக்குள் கொதித்த பகைமையுணர்வை நேற்று மெலினியா வெளிப்படையாகவே கொட்டித் தீர்த்தார்.

இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ‘இந்த வெள்ளை மாளிகையில் தொடர்ந்து பணியாற்றும் கவுரவத்தை மிரா ரெக்கார்டல் இழந்து விட்டார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மிரா ரெக்கார்டல் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அதிபரின் வெள்ளை மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #MelaniaTrump #WhiteHouse  #MiraRicardel 
Tags:    

Similar News