செய்திகள்

ஆஸ்திரேலிய ஆஸ்பத்திரியில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்

Published On 2018-11-10 02:26 GMT   |   Update On 2018-11-10 02:26 GMT
ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ராயல் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரித்தனர். #MelbourneHospital #ConjoinedTwins
சிட்னி :

பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஒரு தொண்டு அமைப்பின் உதவியுடன் அந்தக் குழந்தைகள் தங்களது தாயுடன், அறுவை சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள ராயல் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.



அவர்களுக்கு டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 18 மருத்துவ நிபுணர்கள் 2 குழுவினராக பிரிந்து 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். முடிவில் குழந்தைகள் இருவரும் வெற்றிகரமாக தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் வயிறு ஒட்டிப்பிறந்ததுடன், கல்லீரலும் இணைந்தே இருந்தது குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகள் நலம் அடைந்து வருகின்றனர். அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜோ கிராமெரி கூறும்போது, ‘‘ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்து விட்டோம் என்று அவர்களின் தாயாருக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். நம்பிக்கையுடன்தான் இந்த அறுவை சிகிச்சையை செய்தோம். இப்போது அது வெற்றி பெற்றிருக்கிறது. அவர்கள் முழுமையாக குணம் அடைவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது’’ என்று குறிப்பிட்டார். #MelbourneHospital #ConjoinedTwins
Tags:    

Similar News