செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 13 பேர் பலி

Published On 2018-10-20 14:03 GMT   |   Update On 2018-10-21 03:27 GMT
ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 13-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். #Afghanistanpoll
காபுல்:

249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் இவர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் பத்துக்கும் அதிகமான வேட்பாளர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

தலிபான்களின் கோட்டை என்று கருதப்படும் கந்தஹார் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கவர்னர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

வாக்குப்பதிவின்போதும் தலிபான்கள் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களில் ஈடுபடலாம் என அங்குள்ள பொதுமக்களிடையே பீதி நிலவியது.

இதனைதொடர்ந்து, கந்தஹார் மாகாணத்தில் மட்டும் பாராளுமன்ற தேர்தல் ஒருவாரத்துக்கு பின்னர் நடத்தப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்ட பள்ளிகளில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கச் சென்றனர். சில இடங்களில் வாக்குச்சாவடிகள் தாமதமாக திறந்ததால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது.

தலைநகர் காபுலில் உள்ள சில பள்ளிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பீதியடைந்த வாக்காளர்கள் உயிர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதேபோல் நாட்டின் பிறபகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதல் மற்றும் தேர்தல் சார்ந்த வன்முறை சம்பவங்களில் 13-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Afghanelectionviolence #Kabulpollingstations #Afghanistanpoll
Tags:    

Similar News