சினிமா செய்திகள்

பருத்தி வீரன் படத்தில் 'ஊரோரம் புளியமரம்' பாடல் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் மரணம்

Published On 2025-12-31 10:12 IST   |   Update On 2025-12-31 10:12:00 IST
  • மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்பட 5-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி அம்மாள் ஏராளமான விருதுகளையும் பெற்று உள்ளார்.
  • கடந்த 2 நாட்களாக லட்சுமி அம்மாளின் உடல்நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (வயது 75). மறைந்த கிராமிய பாடகி பரவை முனியம்மாவின் நெருங்கிய தோழியான இவரும் பிரபல கிராமிய பாடகியாக வலம் வந்தார். இதனால் கோவில் திருவிழா மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் தனது கணீர் குரலால் கிராமிய இசையில் தமிழ் மணக்க பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார் லட்சுமி அம்மாள்.

இந்த நிலையில் 2007-ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' படத்தில் "ஊரோரம் புளியமரம்" பாடல் பாடி லட்சுமி அம்மாள் நடித்தார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதனால் பிரபலம் அடைந்த லட்சுமி அம்மாள் மேலும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பாடி வந்தார்.

பக்தி, கும்மிபாட்டு, தாலாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி பாடல்களை மண்மனம் மாறாமல் கிராமிய வாழ்க்கையை கருத்தில் கொண்டு பாடிய இவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.

மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்பட 5-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி அம்மாள் ஏராளமான விருதுகளையும் பெற்று உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லட்சுமி அம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கடந்த 2 நாட்களாக லட்சுமி அம்மாளின் உடல்நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் தனது வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தி கேட்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News