விளையாட்டு

உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: கார்ல்சென் சாம்பியன்- வெண்கலம் வென்ற அர்ஜுன் எரிகைசி

Published On 2025-12-31 10:28 IST   |   Update On 2025-12-31 10:28:00 IST
  • உலக பிளிட்ஸ் போட்டியில் 9-வது முறையாக கார்ல்சென் பட்டத்தை வென்றார்.
  • உலக பிளிட்ஸ் போட்டியின் ஓபன் பிரிவில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அர்ஜுன் எரிகைசி பெற்றார்.

தோகா:

உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. முதலில் நடந்த ரேபிட் வடிவிலான போட்டியில் ஓபன் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

அடுத்து அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய உலக பிளிட்ஸ் போட்டி நடந்தது. இதில் ஓபன் பிரிவில் 19 சுற்றுகளும், பெண்கள் பிரிவில் 15 சுற்றுகளும் நடந்தன.

252 வீரர்கள் பங்கேற்ற ஓபன் பிரிவில் அனைத்து சுற்றுக்கள் முடிவில் அரை இறுதிக்கு கார்ல்சென் (நார்வே), அர்ஜுன் எர்கைசி (இந்தியா), பாபியானோ காருனே (அமெரிக்கா), நோடிர்பெக் அப்தசத்தோ ரோவ் (உஸ்பெகிஸ்தான்) ஆகியோர் தகுதி பெற்றனர். இதில் அர்ஜுன் எரிகைசியை அப்துசத்தோரோவ்வும், காருனேவை கார்ல்சென்னும் தோற்கடித்தனர்.

இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு கார்ல்சென், அப்துசத்தோரோவ் தகுதி பெற்று பலப்பரீட்சை நடத்தினர். 4 சுற்றுக்கள் கொண்ட இறுதிச்சுற்றில் முதல் 3 ஆட்டங்களுக்கு பிறகு இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 4-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

அவர் 2.5-1.5 என்ற கணக்கில் வென்று பிளிட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கார்ல்சென், உலக பிளிட்ஸ் போட்டியில் 9-வது முறையாக பட்டத்தை வென்றார்.

பிளிட்ஸ் போட்டியில் ஓபன் பிரிவில் 19 சுற்றுக்கள் முடிவில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அவர் அரை இறுதியில் தோற்றார். இதனால் அவருக்கு வெண்கலபதக்கம் கிடைத்தது. ஏற்கனவே அவர் ரேபிட் பிரிவில் 3-வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக பிளிட்ஸ் போட்டியின் ஓபன் பிரிவில் பதக்கம் வென்ற 2-வது இந்திய ஆண் வீரர் என்ற பெருமையை அர்ஜுன் எரிகைசி பெற்றார்.

உலக பிளிட்ஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை பிபிசரா சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags:    

Similar News