செய்திகள்

அமெரிக்கா சென்ற இலங்கை அதிபருக்கு எதிராக கொட்டும் மழையில் தமிழர்கள் போராட்டம்

Published On 2018-09-27 05:28 GMT   |   Update On 2018-09-27 05:28 GMT
ஐ.நா.வில் உரையாற்ற அமெரிக்கா சென்ற இலங்கை அதிபருக்கு எதிராக கொட்டும் மழையில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #SrilankaPresident #MaithripalaSirisena
நியூயார்க்:

ஐ.நா. பொது சபைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்ற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின் போது கடைசி 2 வாரங்களும், 5 முறை ராணுவ மந்திரி பொறுப்பிலும் அதிபர் சிறிசேனா இருந்தார். அவரது உத்தரவின் பேரில் தான் 70ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என இலங்கை தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இவர் ஒரு சந்தேகத்துக்குரிய போர் குற்றவாளி என்பதை ஐ.நா. பொதுசபை உறுப்பினர்களுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன் கூட்டியே தெரிவித்து இருந்தது. மேலும் போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை ராணுவத்தை விடுவிக்க புதிய யோசனை வைத்திருப்பதாக சிறிசேனா கூறியிருந்தார்.

மேற்கண்ட காரணங்களுக்காக அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. #SrilankaPresident #MaithripalaSirisena
Tags:    

Similar News