செய்திகள்

முன்னறிவிப்பின்றி ஆப்கானிஸ்தானுக்கு சென்ற அமெரிக்க ராணுவ மந்திரி

Published On 2018-09-08 04:18 IST   |   Update On 2018-09-08 04:18:00 IST
அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் ஆப்கானிஸ்தானில் புதியதாக பதவியேற்ற நேட்டோ படை தளபதியை சந்தித்து பேச சென்றுள்ளார்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த 17 ஆண்டுகளாக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தலீபான் பயங்கரவாதிகளை அமைதி பேச்சுவார்த்தைக்கு இணங்க வைப்பதற்கான நடவடிக்கையிலும் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு உள்ளது.

இதற்காக கடந்த ஓராண்டாக தலீபான் நிலைகள் மீது வான்தாக்குதல்களை அதிகரிப்பதிலும், ஆப்கானிஸ்தான் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக கூடுதல் படைகளை அனுப்பி வைப்பதிலும் அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. எனினும் ஆப்கானிஸ்தானில் இன்னும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அமெரிக்காவால் முடியவில்லை.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் நேட்டோ படைக்கு புதிய தளபதியாக அமெரிக்க ராணுவ தளபதி ஜோசப் டன்போர்டு சமீபத்தில் பதவியேற்றார். அவரை சந்தித்து பேசுவதற்காக அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் நேற்று காபூல் சென்றார். இந்த சந்திப்பின் போது தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்து இருவரும் விவாதிக்கின்றனர்.

முன்னதாக தலீபான்களுடனான பேச்சுவார்த்தை குறித்து கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டு இருந்த அவர், ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் மறுசீரமைப்பு பணிகள் இனியும் கானல் நீராக இருக்காது என கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News