செய்திகள்

சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் - அமெரிக்க விமானப்படை வீரர் குற்றவாளி என தீர்ப்பு

Published On 2018-09-01 19:32 GMT   |   Update On 2018-09-01 19:32 GMT
2016-ம் ஆண்டு மெக்தாப் சிங் பக்‌ஷி என்ற சீக்கியர் இனவெறி தாக்குதலுக்கு ஆளான வழக்கில் அமெரிக்க விமானப்படை வீரர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். #SikhMan
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரின் டுபோண்ட் சர்க்கிள் பகுதியில் 2016-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 21-ந் தேதி, மெக்தாப் சிங் பக்‌ஷி என்ற சீக்கியர் இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்.

அவர் அந்தப் பகுதியில் தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த அமெரிக்க விமானப்படை வீரரான திலான் மில்ஹாசன் என்பவர், அவரது தலைப்பாகையை பிடித்து இழுத்ததுடன், அவரது முகத்தில் சரமாரியாக குத்து விட்டார். இதில் அவர் மயங்கிச் சரிந்தார். இது இனவெறித்தாக்குதல் ஆகும்.

இது தொடர்பாக மெக்தாப் சிங் பக்‌ஷி புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, திலான் மில்ஹாசனை கைது செய்தனர்.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரம், நவம்பர் 30-ந் தேதி அறிவிக்கப்படும். அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று இந்திய வம்சாவளியை சேர்ந்த விலாசினி கணேஷ் என்ற பெண் சுகாதார திட்ட மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அங்கு உள்ள கோர்ட்டு 63 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.  #SikhMan
Tags:    

Similar News