செய்திகள்

பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு

Published On 2018-08-20 05:32 GMT   |   Update On 2018-08-20 05:32 GMT
பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் சிக்கன நடவடிக்கையாக பிரதமர் இல்லத்தில் தங்க போவதில்லை என அறிவித்துள்ளார். #PakistanPM #ImranKhan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் நேற்று டெலிவி‌ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

‘‘பிரதமர் இல்லத்தில் கவர்னர் மாளிகைகள் உள்ளன. அங்கு ஆடம்பரங்கள் தலைவிரித்தாடுகின்றன. நமது மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு செலவிட பணம் இல்லை. அதே நேரத்தில் நம்மை ஆள்பவர்கள் வாழ்வதற்காக பணம் செலவழிக்கப்படுகிறது.

இத்தகைய நிலை இருந்தால் மக்கள் எப்படி வாழமுடியும். பிரதமர்களின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்கு ரூ.65 கோடி செலவிடப்பட்டுள்ளது. சபாநாயகரின் செலவுக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செலவினங்களை குறைக்க திட்டம் தீட்டப்படும்.

நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. இஸ்லாமாபாத்தில் 3 படுக்கை அறை கொண்ட ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன். பான்சுலாவில் உள்ள எனது வீட்டில் தான் தங்க நினைத்தேன். ஆனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு துறை தெரிவிக்கிறது.


எனவே இங்கு தங்க வேண்டிய நிலை உள்ளது. பிரதமர் இல்லத்தில் பணியில் இருக்கும் ஊழியர்களை மட்டுமே என்னுடன் வைத்துக்கொள்ள போகிறேன். 2 கார்களை மட்டுமே பயன்படுத்துவேன். ஏனெனில் பாதுகாப்பு துறையினருக்கு ஒன்று தேவைப்படுகிறது.

பிரதமர் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அதில் கிடைக்கும் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். கவர்னர் மாளிகைகள் அனைத்தும் எளிமையாக்கப்படும். பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும்.

நாடுமுழுவதும் செய்யப்படும் அனாவசிய செலவை குறைக்க டாக்டர் இஷ்ரத் உசேன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசு பணம் மக்கள் நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது’’ என்றார். #PakistanPM #ImranKhan
Tags:    

Similar News