செய்திகள்

சிரியா ஆயுத கிடங்கில் பயங்கர வெடி விபத்து - 39 பேர் உயிரிழப்பு

Published On 2018-08-12 14:41 GMT   |   Update On 2018-08-12 14:48 GMT
சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஆயுத கிடங்கில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். #Weaponsdepot #Idlibexplosion #39civilianskills
டமாஸ்கஸ்:

சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுப்படைகளுக்கும் போராளி குழுக்களுக்கும் இடையே நடந்துவரும் உள்நாட்டுப் போரால் அங்கு வாழும் சுமார் 25 லட்சம் மக்களில் சரிபாதி பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டனர்.

இந்த மாகாணத்தின் பல பகுதிகள் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் துருக்கி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள சர்மாடா நகரில் உள்ள அரசு ஆயுத கிடங்கில் இன்று பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது.

அதிர்ச்சியில் அருகாமையில் உள்ள இரு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய மக்களை புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் ராணுவத்தினர் மீட்டனர். எனினும், 39 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 50 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அங்குள்ள போர் நிலவரங்களை பார்வையிடும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இது விபத்தா? அல்லது வன்முறை தாக்குதலா? என்பது தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Weaponsdepot  #Idlibexplosion #39civilianskills
Tags:    

Similar News