செய்திகள்

எகிப்து நாட்டில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்த வந்த மனித வெடிகுண்டு வழியில் பலி

Published On 2018-08-12 08:53 GMT   |   Update On 2018-08-12 08:53 GMT
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வழியில் குண்டுவெடித்து உயிரிழந்தான். #Egyptsuicidebombing #Egyptchurch #suicidebombing
கெய்ரோ:

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் எகிப்து நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் அவரவர்களின் தெய்வங்களை வணங்கும் வழிபாட்டு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்நாட்டில் சிறுபான்மையாக வாழும் ‘காப்டிக்’ கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே  உள்ள புறநகர் பகுதியான மோஸ்ட்டோரோட் என்னும் இடத்தில் இருக்கும் கன்னி மேரி தேவாலயத்தில் நேற்று ஆண்டுவிழாவையொட்டி, வழிபாடு செய்வதற்காக பலர் சென்று கொண்டிருந்தனர்.



அப்போது, அப்பகுதியில் உள்ள பாலத்தின்மீது பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை தடுத்து நுறுத்தி சோதனையிட முயன்றனர். அவர்களிடம் சிக்காமல் தப்ப நினைத்த சந்தேகத்துக்குரிய நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, சம்பவ இடத்திலேயே உடல் சிதறி, உயிரிழந்தான்.

மத்திய கிழக்கு நாடுகளில் மிகபெரிய கிறிஸ்தவ சமுதாயமாக வாழும் காப்டிக் கிறிஸ்தவர்களை குறிவைத்து எகிப்து நாட்டில் அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இங்குள்ள இரு காப்டிக் தேவாலயங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 45 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Egyptsuicidebombing  #Egyptchurch #suicidebombing 
Tags:    

Similar News