செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு

Published On 2018-08-09 10:32 GMT   |   Update On 2018-08-09 10:32 GMT
ரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #Russia #USA #EconomicSanctions
மாஸ்கோ:

ரஷிய உளவுப்படையைச் சேர்ந்த செர்கே ஸ்கிரிபால் என்பவரும் அவரது மகள் யூலியா ஆகியோர் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். ரஷிய உளவுப்படையைச் சேர்ந்த செர்கே ஸ்கிரிபால் இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த மார்ச் மாதம் செர்கே மற்றும் அவரது மகள் மீது மர்ம நபர்கள் ரசாயன தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முழுக்க முழுக்க ரஷியா தான் காரணம் என இங்கிலாந்து குற்றம்சாட்டியது. இங்கிலாந்தின் குற்றசாட்டை ஏற்ற அமெரிக்கா ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது.

ஆனால் ரஷியா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வரும் நிலையில் இங்கிலாந்து தனியாக விசாரணை ஒன்றை நடத்தி அதில் தாக்குதல் நடத்தியது ரஷ்யாதான் என உறுதி செய்தது. இதையடுத்து ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைகுறித்து ரஷியாவின் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘இந்த பொருளாதார தடையை நிச்சயம் ஏற்க முடியாது' என உறுதிபட தெரிவித்துள்ளது. #Russia #USA #EconomicSanctions
Tags:    

Similar News