செய்திகள்

கூடுதல் வரி விதித்தால் தக்க பதிலடி தருவோம் - அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Published On 2018-08-01 19:29 GMT   |   Update On 2018-08-01 19:29 GMT
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் முடிவை ட்ரம்ப் அரசு அமல்படுத்தினால் அதற்கு தக்க பதிலடி தருவோம் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெய்ஜிங் :

டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உலோகங்கள் உள்ளிட்ட உலக நாடுகளின் பொருட்களுக்கான வரியை பன்மடங்காக உயர்த்தியது.  இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்தனர்.  

மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் ட்ரம்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் இருந்து ட்ரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில்,  அமெரிக்க அரசு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான சுமார் 800 பொருட்களுக்கு சமீபத்தில் கூடுதல் வரி விதித்திருந்தது.  

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்துள்ளது.  

இதற்கிடையே, சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கெங் ஷுவாங் கூறுகையில், சீனாவின் சட்ட அடிப்படையிலான உரிமைகள் மற்றும் பலன்களை காக்க நிச்சயம் அமெரிக்காவிற்கு பதிலடி தரப்படும் என கூறினார்.  எனினும், பதிலடி என்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றிய விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News