செய்திகள்

சிக்கல் இல்லாமல் தாய்நாடு திரும்பலாம் - ஐக்கிய அமீரகம் பொதுமன்னிப்பு திட்டம்

Published On 2018-08-01 16:30 GMT   |   Update On 2018-08-01 16:30 GMT
பணி அனுமதிக்காலம் முடிந்து தங்கியுள்ள வெளிநாட்டினர் எவ்வித தண்டனையும் இன்றி நாடு திரும்பும் பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அமீரக அரசு அமல்படுத்தியுள்ளது. #UAEAmnesty2018
துபாய்:

எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடான ஐக்கிய அமீரகத்தில் சுமார் 2.8 மில்லியன் இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். 

இந்திய தொழிலாளர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி அனுமதிக்காலம் முடிந்தும் அந்நாட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வேலை நீட்டிப்பு மற்றும் ஊதியத்தை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துவிட்டன. 

இது தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன. விசாக்காலம் முடிந்தும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் அவர்கள் தாய்நாடு திரும்புவதிலும் சிக்கல் இருந்தது.



இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அமீரக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த பொதுமன்னிப்பு திட்டம் மூலம் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நலனாக இருக்கும். இப்போதைய திட்டப்படி அவர்கள் நாட்டைவிட்டு அபராதம் எதுவும் செலுத்தாமல் வெளியேறலாம்.

மேலும், வேலை இல்லாதவர்கள் வேலையை தேடிக்கொள்ள 6 மாதங்கள் அனுமதி வழங்கப்படுகிறது. இன்று முதல் பொதுமன்னிப்பு அமலாகியுள்ளதால் பலர் தங்களது சொந்த நாடு திரும்ப தங்களது நாட்டு தூதரகத்தில் குவிந்தனர். இன்று முதல் நாளே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாய்நாடு திரும்ப விண்ணப்பித்தனர்.

மூன்று மாதங்களுக்கு இந்த பொதுமன்னிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News