செய்திகள்

நிதி மோசடி வழக்கு - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தலைமறைவு என அறிவிப்பு

Published On 2018-07-21 20:40 GMT   |   Update On 2018-07-21 20:40 GMT
நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி உள்பட 20 பேர் தலைமறைவானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தானின் யுனைடெட் வங்கி மற்றும் சம்மிட் வங்கிகளில் 29 போலி கணக்குகளை தொடங்கி நிதி மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத்தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் உள்பட 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக சம்மிட் வங்கி தலைவரும், சர்தாரியின் கூட்டாளியுமான உசேன் லவாயை அந்நாட்டின் பெடரல் விசாரணை முகமை கடந்த 6-ந் தேதி கைது செய்தது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் அங்கு பூதாகரமாக வெடித்து உள்ளது. இது தொடர்பான விசாரணை அந்நாட்டின்  சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் சிக்கியுள்ள 20 பேரும் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், வங்கி நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட உசேன் லவாய்க்கு எதிராக பெடரல் விசாரணை முகமை கோர்ட்டில் ஆவணம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த ஆவணத்தில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் உள்பட 20 பேர் தலைமறைவானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து பேசிய சர்தாரியின் செய்தித்தொடர்பாளர் அமிர், அரசியல் நோக்கத்திற்காவும், சர்தாரியின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பாராளுமன்ற பொதுதேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வும், முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி தலைமறைவானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிகழ்வும் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #AsifAliZardari 
Tags:    

Similar News