செய்திகள்

ராணி எலிசபெத்தை வெயிலில் காக்க வைத்த அதிபர் டிரம்ப்

Published On 2018-07-14 06:15 GMT   |   Update On 2018-07-14 06:15 GMT
4 நாள் பயணமாக லண்டன் சென்றுள்ள டிரம்ப் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை வெயிலில் காக்க வைத்த சம்பவம் குறித்து அந்நாட்டு மக்கள் டிரம்ப்பை கிண்டல் செய்துள்ளனர். #trump #QueenElizabeth
லண்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இங்கிலாந்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக லண்டன் சென்றார்.

அவர் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்திக்க திட்டமிட்டார். பொதுவாக ராணியை சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள் முன்கூட்டியே வந்து விடுவார்கள்.

ஆனால் அதிபர் டிரம்ப் 10 நிமிடம் காலதாமதமாக வந்தார். இதனால் ராணி எலிசபெத் 10 நிமிடம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ராணி அவதிப்பட்டார்.

மேலும் ராணியை சந்திக்க வரும்போது முதலில் அவர்கள் தான் கைகொடுக்க வேண்டும். ஆனால் டிரம்ப் கை கொடுக்காத காரணத்தால் ராணியே முன்வந்து கை கொடுத்துள்ளார்.



அடுத்தபடியாக பாதுகாப்பு படையினர் டிரம்புக்கு மரியாதை செலுத்தினர் அப்போது பாதுகாவலர்கள் அணிவகுத்து நிற்க தலைவர்கள் நடந்து செல்ல வேண்டும். இதில் ராணி முன்னே செல்ல மற்றவர்கள் அவருக்கு பின்னால் நடந்து செல்ல வேண்டும். இதுதான் நெறிமுறை.



ஆனால் டிரம்ப் எதையும் கண்டுகொள்ளாமல் ராணியை முந்திக்கொண்டு நடந்து சென்றார். இடது பக்கமாக வாருங்கள் என ராணி செய்கையால் தெரிவித்தும் அது டிரம்புக்கு புரியவில்லை.

சிறிது தூரம் நடந்து சென்ற டிரம்ப் அதன்பின்னர் தன்னை சரிசெய்துகொண்டு 15 நிமிடங்கள் காத்திருந்து விட்டு ராணி முன்னோக்கி வந்தவுடன் ஒன்றாக சேர்ந்து நடந்து வந்துள்ளார்.



இதுபோன்ற மரியாதை செலுத்தும் நிகழ்வில் ராணி நடந்து செல்லும்போது அவரது கணவர் பிலிப் ஒரு அடி பின்னே தான் நடந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் இந்த நடைமுறையை இங்கிலாந்து மக்கள் கிண்டல் செய்துள்ளனர். ஒரு நாட்டிற்கு வருகையில் நெறிமுறை என்ன என்பதை கற்றுக்கொண்டு வாருங்கள். இந்த டிரம்புக்கு நெறிமுறை என்பது குறித்து தெரியாது போல என தெரிவித்துள்ளனர். #trump #QueenElizabeth
Tags:    

Similar News