செய்திகள்

தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்

Published On 2018-07-12 06:19 GMT   |   Update On 2018-07-12 09:54 GMT
தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி உள்ளது. #ThaiCaveResue
பாங்காக்:

தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் மியான்மர் எல்லையில் மலை உச்சியில் 800 மீட்டர் ஆழத்தில் 10 கி.மீ. தூரம் உள்ள குகை உள்ளது. கடந்த மாதம் 23-ந்தேதி ‘காட்டுப் பன்றிகள்’ என்ற கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் சாகச பயணம் மேற்கொண்டனர். குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்றபோது திடீர் என்று மழை பெய்து வெள்ளம் புகுந்தது. அவர்களால் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 9 நாட்களுக்கு பிறகுதான் அவர்கள் உயிருடன் இருப்பது வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.

இதையடுத்து 13 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் தாய்லாந்து அரசு ஈடுபட்டது. இங்கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாட்டு குகை மீட்பு நிபுணர்கள் முத்துக்குளிப்பு வீரர்கள் அங்கு குவிந்து மீட்பு பணியில் உதவினர்.

கடந்த 8-ந்தேதி 4 சிறுவர்களும், 9-ந்தேதி 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். கடைசியாக 10-ம் தேதி 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை தாய்லாந்து நாட்டு கடற்படையினர் உயிருடன் மீட்டனர். இது மிகப்பெரிய சாதனையாகும்.

இதை தாய்லாந்து நாடே மிகப்பெரிய விழாவாக கொண்டாடி வருகிறது. அப்போது சிறுவர்களை மீட்டது பற்றிய சாகசங்களை அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


இங்கிலாந்தைச் சேர்ந்த 2 முத்துக்குளிப்பு வீரர்கள்தான் முதலில் 12 சிறுவர்களையும் கண்டு பிடித்தனர். அவர்கள் வெளியே வந்துதான் சிறுவர்களைப் பற்றிய விவரங்களை தெரிவித்தனர். அவர்கள் வெளியில் வந்து தகவல் சொன்ன 6 நாட்களுக்குப் பிறகுதான் முழு வீச்சில் மீட்பு பணியை தொடங்க முடிந்தது.

முதமலில் அவர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது. குகைக்குள் தண்ணீர் நிரம்பி இருந்தது. சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் மறுபுறம் ஓட்டை போட்டு மீட்கலாமா என முயற்சி நடந்தது. அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

அதன்பிறகு தண்ணீரை வெளியேற்றி மீட்கும் முயற்சி கைகொடுத்தது. இதற்கு இந்தியாவின் புனேயைச் சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம் உதவியது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கு சென்று ஆய்வு செய்து, பம்புகளை பயன்படுத்தி குகைக்குள் உள்ள தண்ணீரை வெளியேற்றுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி,  குகைக்குள் நிரம்பி இருந்த தண்ணீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

அதன்பிறகு சிறுவர்களுக்கு முக கவசம் பொருத்தியும் கயிற்றை பிடிமானமாக வைத்தும் ஒவ்வொரு சிறுவனாக மீட்டனர். இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தாய்லாந்து வெளியுறவு மந்திரி டான் பிரமுத்வினய் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், சிறுவர்களை மீட்கும் பணிக்கு கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி வழங்க ஏற்பாடு செய்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்ட செய்தியை கேட்டு எங்கள் நாட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்திய நிறுவனத்தின் உதவியால் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு பிரதிபலிக்கிறது. அதற்காக உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் தாய்லாந்து மக்கள் சார்பிலும் மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். #ThaiCaveResue
Tags:    

Similar News