செய்திகள்

நாடு திரும்புவதில் இருந்து உச்சநீதிமன்றமே என்னை தடுக்கிறது - முஷரப்

Published On 2018-06-21 10:44 GMT   |   Update On 2018-06-21 10:44 GMT
நாடு திரும்ப நான் முடிவு செய்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் என்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவு என்னை நாடு திரும்புவதில் இருந்து தடுக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார். #Musharraf #Pakistan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு சிகிச்சை பெறுவதற்காக துபாய் சென்று பின் லண்டனில் சென்று தஞ்சம் அடைந்தார். அவர் மீதான வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதை முஷரப் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முஷரப் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதித்தனர். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி முஷரப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனால் நீதிபதிகள் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அளித்திருந்த அனுமதியை வாபஸ் பெற்றனர். மேலும், முஷரப் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறித்தினர்.

இந்நிலையில், காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய முஷரப், ‘நான் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன்., ஆனால் உச்சநீதிமன்றம் என்னை கைது செய்ய அளித்த உத்தரவு என் மனதை மாற்றுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘நான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் என்னை கைது செய்வதால் நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்வித நன்மைகளும் விளையப்போவதில்லை. நான் குற்றவாளி இல்லை என்பது உலகமே அறியும். சரியான நேரத்தில் நாடு திரும்புவதற்காக நான் காத்திருக்கிறேன்’ என முஷரப் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான்  முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முகமது அம்ஜத், முஷரப் நாடு திரும்ப தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யும் அளவுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். #Musharraf #Pakistan
Tags:    

Similar News