செய்திகள்

அல்ஜீரியா நாட்டில் பரீட்சையில் காப்பி அடிப்பதை தடுக்க இணையதள சேவை நிறுத்தம்

Published On 2018-06-21 11:43 IST   |   Update On 2018-06-21 11:43:00 IST
அல்ஜீரியா நாட்டில் பரீட்சையில் காப்பி அடிப்பதை தடுக்க ஒவ்வொரு நாளும் பரீட்சை நடைபெறும் 2 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் இணையதள சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #internet #exams #cheating
அல்ஜர்:

நமது நாட்டில் பீகார் போன்ற மாநிலங்களில் பரீட்சையில் காப்பி அடிப்பது சர்வ சாதாரண வி‌ஷயமாக உள்ளது.

இதேபோல் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அல்ஜீரியா நாட்டிலும் பரீட்சையில் காப்பி அடிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

2016-ம் ஆண்டு இங்கு பள்ளி இறுதித்தேர்வில் பரீட்சை நடக்கும் போது, முன்கூட்டியே வினாத்தாள் இணைய தளங்களில் வெளியானது.

மேலும் சமூகவலை தளங்களில் விடைகளை உடனடியாக அனுப்பினார்கள். இவற்றை பள்ளியில் பரீட்சை எழுதும் மாணவர்கள் செல்போன்களை மறைத்து எடுத்து சென்று அதை பயன்படுத்தி தேர்வு எழுதினார்கள்.

இவ்வாறு காப்பி அடிப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் போதிய பலன் கிடைக்கவில்லை.

எனவே, இந்த ஆண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று நாடு முழுவதும் உயர்நிலைப்பள்ளி இறுதி வகுப்பு தேர்வுகள் தொடங்கியது. 25-ந் தேதி வரை தொடர்ந்து தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வை 7 லட்சம் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் பரீட்சை எழுத 2 ஆயிரம் இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காப்பி அடிப்பதை தடுக்க ஒவ்வொரு நாளும் பரீட்சை நடைபெறும் 2 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் இணையதள சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 5 நாட்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் முடக்கும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது. #internet #exams #cheating
Tags:    

Similar News