செய்திகள்

ஜப்பான் நிலநடுக்கத்திற்கு மூன்று பேர் பலி - பலர் காயம்

Published On 2018-06-18 07:44 GMT   |   Update On 2018-06-18 07:44 GMT
ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். #JapanEarthquake #EarthquakeOsaka
டோக்கியோ:

ஜப்பானின் ஒசாகா, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அலகாக பதிவாகியிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் பீதி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர்.

இந்த கடுமையான நிலநடுக்கத்திற்கு  குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தின்போது பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் முதியவர் ஒருவரும், வீட்டிலுள்ள புத்தக அலமாரியில் சிக்கி ஒருவரும் உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.



மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது. ரெயில் சேவைகள் தடைப்பட்டன. தொழிற்சாலை பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பலர் நகரும் படிக்கட்டுகளில் சிக்கிக்கொண்டனர். சாலைகளின் கீழே செல்லும் தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அருகில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. #JapanEarthquake #EarthquakeOsaka

Tags:    

Similar News