செய்திகள்

சீக்கிய குருத்வாரா மீதும் தாக்குதல் - இங்கிலாந்தில் மசூதிக்கு தீ வைப்பு

Published On 2018-06-06 19:56 GMT   |   Update On 2018-06-06 19:56 GMT
இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Mosque #SikhGurdware
லண்டன்:

இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.45 மணிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்து விட்டனர்.

அடுத்த சில நிமிடங்களில் லேடி பிட் சந்து பகுதியில் அமைந்து உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருநானக் நிஷ்கம் சேவாக் ஜாதா குருத்வாராவுக்கும் விஷமிகள் தீ வைத்து விட்டனர். குருத்வாராவின் கதவில் ஒரு பாட்டில் பெட்ரோலை ஊற்றி விஷமிகள் தீ வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மசூதியிலும், குருத்வாராவிலும் தீயை அணைத்தனர்.

லீட்ஸ் நகர சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஹோம்ஸ் இந்த சம்பவங்கள் பற்றி குறிப்பிடுகையில், “இவ்விரு சம்பவங்களும் அருகருகே நடந்து உள்ளன. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம். இது விசாரணையின் ஆரம்ப காலம்தான். இவ்விரு சம்பவங்களும், வெறுப்புணர்வு சம்பவங்கள் என்றே கருதுகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்துகிறோம்” என கூறினார்.

மேலும், சம்பவ பகுதியில் அமைந்து உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் துப்பு துலக்குவதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து லீட்ஸ் நகரில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 #Mosque #SikhGurdware  #tamilnews
Tags:    

Similar News