செய்திகள்

கோர்ட்டில் ஆஜராகாததால் மு‌ஷரப்பின் பாஸ்போர்ட், அடையாள அட்டை முடக்கம்

Published On 2018-06-01 05:28 GMT   |   Update On 2018-06-01 05:28 GMT
தேச துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜாராகாத பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை முடக்கம் செய்யப்பட்டது. #PervezMusharraf
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (74). இவர் 1999 முதல் 2008-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.

இவர் பதவியில் இருந்த போது 2007-ம் ஆண்டு அவரை நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பலரை வீட்டு காவலில் வைத்தார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.

தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சிறப்பு கோர்ட்டில் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் ஆஜராக மு‌ஷரப்புக்கு பல தடவை சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது துபாயில் தங்கியிருக்கிறார். அதனால் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

அதை தொடர்ந்து மு‌ஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை முடக்கி வைக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதனால் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள முடியாது. வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது.

ஏற்கனவே இந்த வழக்கில் மு‌ஷரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடும்படி உள்துறை அமைச்சகத்துக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மு‌ஷரப்பிற்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. #PervezMusharraf
Tags:    

Similar News