செய்திகள்

முடிவுக்கு வந்த வர்த்தகப்போர் - அமெரிக்க பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்

Published On 2018-05-20 09:45 GMT   |   Update On 2018-05-20 09:45 GMT
இருநாடுகளுக்கு இடையே வர்த்தக தகராறு இருந்து வந்த நிலையில், பல தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது. #TradeWar #US #China
வாஷிங்டன்:

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் காப்புரிமையை தவறான முறையில் பயன்படுத்தி அதே பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவின் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

இதன் நீட்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு நாடுகளுக்கும் வர்த்தக தகராறு தொடங்கியது. இதன் காரணமாக, சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களின் மீது பல்வேறு வரிகளை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்காவில் இருந்து  சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 128 அமெரிக்க பொருட்களின் மீது அதிக வரிகளை அந்நாடு விதித்தது. இதையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப்போர் மூலம் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப்போரை தவிர்க்கும் நோக்கில் வாஷிங்டன் நகரில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களின் மீதான வரி விதிப்பை குறைத்துகொள்வதாக அமெரிக்கா தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, அதிகரித்துவரும் சீன நுகர்வோர்களின் தேவைகள் மற்றும் அதை ஈடு செய்ய தேவைப்படும் உயர்தர பொருளாதார மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவிலிருந்து அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்யப்படும் என சீனா தரப்பில் பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்டுள்ளது.

அறிவுசார் பொருட்களின் காப்புரிமைகளை தவறாக பயன்படுத்தாமல் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் வர்த்தகத்தை அதிகரிப்பது, இறக்குமதி பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியை இரண்டு நாடுகளும் குறைத்துக்கொள்வது, உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற முக்கிய முடிவுகள் இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா சார்பில், வணிகத்துறை செயலாளர் வில்புர் எல்.ரோஸ் மற்றும் அமெரிக்க வணிக பிரதிநிதி ராபர்ட் இ.லைத்திசர் ஆகியோரும், சீனாவின் தரப்பில் அதிபரின் சிறப்பு அதிகாரி லியூ ஹீவும் இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிபர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சீன தொலைதொடர்ப்பு நிறுவனங்கள் மீண்டும் தங்களது தொழிலை அமெரிகாவில் தொடங்க உதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். #TradeWar #US #China
Tags:    

Similar News