செய்திகள்

நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

Published On 2018-05-17 10:23 GMT   |   Update On 2018-05-17 10:23 GMT
மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுக்களை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Nawazsharif #treasoncase #dismissed
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இருந்தவாறு செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

நவாஸ் ஷெரீப்பின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். அதே நிலையில், நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தெஹ்ரீக் இ இன்சாப், பாகிஸ்தானி அவாமி தெஹ்ரீக் மற்றும் வழக்கறிஞர் அப்துல்லா மாலிக் ஆகியோர் லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை நிராகரித்த நீதிபதி மிர்ஷா, மூன்று பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிபதி தெரிவித்தார். #Nawazsharif #treasoncase #dismissed
Tags:    

Similar News