செய்திகள்

செப்டம்பர் மாதத்துக்குள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிவு: இந்தியா- நேபாளம் ஒப்புதல்

Published On 2018-05-12 19:24 GMT   |   Update On 2018-05-12 19:24 GMT
இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள் தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. #India #Nepal #ModiVisitNepal
காட்மாண்டு:

பிரதமர் மோடி அண்டை நாடான நேபாளத்துக்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று அவர் காட்மாண்டு அருகே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பசுபதி நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதேபோல் மஸ்டாக் மாவட்டத்திக்கு சென்று அங்குள்ள முக்திநாத் கோவிலிலும் சாமி கும்பிட்டார். கடல் மட்டத்தில் இருந்து 12,172 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் இருவருக்குமே புனித ஸ்தலமாகும். மோடிக்கு இந்த 2 கோவில்களிலும் கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து தலைநகர் காட்மாண்டு திரும்பிய மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலியுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள்(2015-ல் நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட தினம்) தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக சரக்குகளை கையாளுதல், வர்த்தகம், நேபாளத்துக்கு மேலும் 4 வழித்தடங்களில் விமான போக்குவரத்து, எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைத்தல், எரிசக்தி பகிர்வு, டெராய் பகுதியில் 1,000 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைத்தல், உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்படும் என்று இரு நாடுகளின் அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.

தனது 2 நாள் நேபாள சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை மோடி நாடு திரும்பினார்.  #India #Nepal #ModiVisitNepal 
Tags:    

Similar News