செய்திகள்

ஈராக் பாராளுமன்ற தேர்தல் - ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்

Published On 2018-05-12 09:56 GMT   |   Update On 2018-05-12 09:56 GMT
ஈராக் பாராளுமன்றத்துக்கு 329 புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #Iraqelection
பாக்தாத்:

தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஈராக்கிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படை வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. நடப்பு பாராளுமன்றத்தின் காலம் முடிவடைவதற்குள் நியாயமான வகையில் அடுத்த தேர்தலை நடத்த வேண்டும் உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், புதிய வாக்காளர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ஈராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போராலும் தேர்தல் தாமதமானது.

இந்நிலையில், 329 இடங்களை கொண்ட ஈராக் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 18 மாகாணங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் சுமார் 7 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.



அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

ஈராக் பிரதமர் ஹைடர் அல் அபாடி மற்றும் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிக்கி இடையில் இந்த தேர்தலில் பலத்த போட்டி நிலவுகிறது.

ஈராக் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் வெற்றி தொடர்பான அறிவிக்கையை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் அறிவிக்கும்.

இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூடும். மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கி புதிய சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

329 இடங்களில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி உறுப்பினர்கள் அதிபரை தேர்வு செய்வார்கள். அந்த அதிபர் பிரதமர் பதவிக்கான நபரை அறிவிப்பார். புதிய பிரதமர் தலைமையிலான மந்திரிசபை 30 நாட்களுக்குள் பதவி ஏற்றுகொள்ளும். #Iraqelection 
Tags:    

Similar News