செய்திகள்

மொசூல் நகர் மீட்பு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் முக்கிய மைல்கல்: ஐ.நா. கருத்து

Published On 2017-07-11 10:56 IST   |   Update On 2017-07-11 10:56:00 IST
ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்து மொசூல் நகர் மீட்கப்பட்டது தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

ஈராக் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல், டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வந்த இந்த நகரை சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிக் கொண்டனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன் தீவிர தாக்குதலை ஈராக் ராணுவம் தொடங்கியது. இரு தரப்பினருக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்ததால் உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக ஈராக் ராணுவம் கூட்டுப் படையினரின் உதவியுடன் மொசூல் நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இறுதியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த உச்சக்கட்ட போரில் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஈராக் ராணுவம் முற்றிலுமாக மீட்டது. இதனை ஈராக் பிரதமர் அல்-அபாதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். 



இந்நிலையில், ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்து மொசூல் நகர் மீட்கப்பட்டது தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தேரஸ், இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் தங்களது பகுதிகளுக்கு மறுகுடியமர்வு செய்வது, மீண்டும் வன்முறை நடைபெறாமல் தடுப்பது உள்ளிட்டவற்றில் ஈராக் அரசிற்கு ஐ.நா. துணை நிற்கும் என்றார். 

Similar News