செய்திகள்

கைதான 3 மணி நேரத்தில் ஜாமீன் பெற்ற விஜய் மல்லையா

Published On 2017-04-18 12:27 GMT   |   Update On 2017-04-18 12:27 GMT
வங்கிக் கடன் மோசடி புகார் தொடர்பாக லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மூன்று மணி நேரங்களில் ஜாமீன் கிடைத்துள்ளது.
லண்டன்:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திரும்பச் செலுத்தவில்லை. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் மல்லையா தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.

லண்டனில் தங்கி இருக்கும் அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாகவில்லை. எனவே, அவருக்கு எதிராக கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

அத்துடன் அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. அவரை நாடு கடத்தும்படி பிரிட்டன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தது. அவற்றை பிரிட்டன் வெளியுறவுத்துறை சமீபத்தில் சரிபார்த்து, மேல் நடவடிக்கைக்காக மாவட்ட நீதிபதிக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், லண்டனில் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். கைது செய்யப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஜாமீனில் வெளிவந்த விஜய் மல்லையா டுவிட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில், ‘எப்போதும் போல இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்தி உள்ளன. எதிர்பார்த்தது போன்று இந்தியா கொண்டு வருவது தொடர்பான விசாரணையானது கோர்ட்டில் இன்று தொடங்கியது’ என கூறியுள்ளார்.

Similar News