செய்திகள்

2 நாள் சுற்றுப்பயணமாக ஈரான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Published On 2016-05-22 20:48 IST   |   Update On 2016-05-22 20:48:00 IST
இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஈரான் சென்றடைந்தார்.
ஈரான்:

ஈரான் அதிபர் ஹசன் ரெளகானி அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமர் மோடி ஈரான் புறப்பட்டு சென்றார். தெஹ்ரானின் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டு நிதி மந்திரி அலி தயெப்னியா வரவேற்றார்.

மோடி வருகையையொட்டி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய - ஈரான் நாடுகளின் இலக்கியங்கள், வரலாறு, கலை, கலாசாரம் ஆகியவற்றின் சிறப்புகள் இந்நிகழ்ச்சிகளில் எடுத்துக் கூறப்படவுள்ளது. பிறகு, அங்கு இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடிய மோடி அங்குள்ள பாய் கங்கா சிங் குருத்வாராவில் வழிபாடு செய்தார்.

மோடியின் பயணத்தின்போது உள்கட்டமைப்பு, எரிசக்தி மேம்பாடு, இருதரப்பு வர்த்தகம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இந்த பயணத்தின் போது, ஈரானில் உள்ள சாப்ஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியா முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில், இரு நாடுகளும் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரான பின் மோடி ஈரான் செல்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News