செய்திகள்
அதிரடி பிராசஸர், 5ஜி வசதி - அசத்தலான ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அதிரடி பிராசஸர் மற்றும் 5ஜி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஹை ஸ்பீடு நிகழ்வில் புதிய ஐபோன் 12 மாடலை மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 12 மாடலில் முதல் முறையாக 5ஜி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் மற்றும் ஐபோன் 12 மினி மாடலில் 5.4 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே மற்றும் இதுவரை வெளியானதில் அதிக உறுதியான ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் வழங்கப்பட்டு உள்ள 5ஜி தொழில்நுட்பம் உலகின் அதிவேக செல்லுலார் இணைய வேகம் வழங்கும் திறன் கொண்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
புதிய ஐபோன் 5ஜி வசதி கிடைக்காத சமயங்களில் எல்டிஇ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளது. மேலும் 5ஜி வசதி வழங்க உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து ஆப்பிள் பரிசோதனைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
புதிய ஐபோன் 12 ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் இருப்பதை விட மிகவும் சக்திவாய்ந்தது என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. மேலும் இது கன்சோல்களுக்கு இணையான கேமிங் அனுபவத்தை ஐபோனில் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இதில் உள்ள பேட்டரி முந்தைய ஐபோனை விட நீண்ட நேர பேக்கப் வழங்கும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. புதிய ஐபோன் 12 மினி விலை 699 டாலர்கள் என்றும் ஐபோன் 12 விலை 799 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.