தமிழ்நாடு செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 15 லட்சம் பெண்கள் மனு

Published On 2025-08-21 14:28 IST   |   Update On 2025-08-21 14:28:00 IST
  • நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
  • திட்டம் தொடங்கப்பட்டு 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்து விட்டது.

சென்னை:

அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ந்தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நகர்ப்புறத்தில் 1428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2135 முகாம்களும் நடத்தப்படுகின்றன.

வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சாதிசான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் பயன்பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள், ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் போன்ற பல கோரிக்கைகளுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏராளமானோர் மனு கொடுத்து வருகின்றனர்.

திட்டம் தொடங்கப்பட்டு 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்து விட்டது. மாநிலம் முழுவதும் இதுவரை 3,600 முகாம்கள் நடந்து உள்ளன.

இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

இந்த மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் மனுக்கள் மீதான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் விண்ணப்பித்த பலருக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News