தமிழ்நாடு செய்திகள்

பொது குடிநீர் குழாய் அகற்றப்பட்டதை கண்டித்து மரக்கிளைகளை சாலையில் வெட்டிப்போட்டு பெண்கள் மறியல்

Published On 2025-05-08 10:56 IST   |   Update On 2025-05-08 10:56:00 IST
  • பொது மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • பெண்கள் உட்பட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் வெள்ளியங்காடு வடக்கு முத்துச்சாமி அவுட் பகுதியில் 4 வீதி பொது மக்களுக்கும் பொதுவாக குடிநீர் குழாய் இருந்து வந்துள்ளது. இந்த குடிநீர் குழாய் மூலம் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெற்று வந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் பொதுக் குடிநீர் குழாய் இருந்து வந்த நிலையில் தற்போது சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக குடிநீர் குழாய் அகற்றப்படுவதாக கூறி அகற்றப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய் அகற்றப்படுவதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் குழாய் அகற்றப்படக்கூடாது, கோடை காலம் என்பதால் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று இரவு குடிநீர் குழாய் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


இன்று காலை அப்பகுதியில் குடிநீர் குழாய் இல்லாததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் மரக்கிளைகளை சாலையில் வெட்டிப்போட்டு முத்துசாமி லே அவுட் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக பொது மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் பொது மக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் உட்பட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வாரிய அலுவலர்களை வரவழைத்து எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குடிநீர் குழாய் மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News