தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.வில் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திக்கு பதவி?

Published On 2025-08-22 12:10 IST   |   Update On 2025-08-22 12:10:00 IST
  • சமீபத்தில் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுவில் அவரது மகளான ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார்.
  • 22 பேர் கொண்ட நிர்வாக குழுவில் ஸ்ரீகாந்தியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பா.ம.க.வில் தந்தை- மகன் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. தனது மகள் வழிப்பேரரான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் . இதன்பின்னர், கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்தி அடைந்தார். இதனை தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி உத்தரவிட்டார்.

இப்படியாக, கடந்த பொதுக்குழுவில் ஆரம்பித்த மோதல் சமீபத்தில் நடந்த முடிந்த பொதுக்குழு வரை நீடித்தது. இருதரப்பினரும் தனது ஆதரவாளர்களுன் பொதுக்குழு கூட்டினர். சமீபத்தில் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுவில் அவரது மகளான ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார். அவருக்கு மேடையில் ராமதாஸ் அருகிலேயே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்திக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு ஸ்ரீகாந்திக்கு பா.ம.க. நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 பேர் கொண்ட நிர்வாக குழுவில் ஸ்ரீகாந்தியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, என் குடும்ப பெண்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சவுமியாவிடம் சொன்னேன். ஆனால் இப்போது நடப்பது உங்களுக்கு தெரியும். பொதுக்குழுவில் சொன்னதுபோல் குடும்ப பெண்கள் கட்சியில் வேண்டாம் என்று சொன்னேன். என்னிடம் கெஞ்சி, கூத்தாடி, வாதாடி தருமபுரியில் போட்டியிட்டார் சவுமியா. தருமபுரி தொகுதியில் முதலில் தான் நிற்பதாக கூறிய அன்புமணி, பின்னர் சவுமியா நிற்பதாக கூறினார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வேண்டாம் என்று கூறியதற்கு எதிர்மாறாக அன்புமணி செயல்பட்டதாக ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News