தமிழ்நாடு செய்திகள்

#WildElephant கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி 2 பேர் பலி

Published On 2026-03-09 10:26 IST   |   Update On 2026-03-09 10:26:00 IST
  • இன்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்காக தேயிலை தோட்டத்திற்கு வந்தனர்.
  • யானை தாக்கி 2 பேர் இறந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் தேவர்சோலை அருகே காரக்குன்னுவை சேர்ந்தவர்கள் ரவி(60), லிங்கன். இவர்கள் 2 பேரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று தேவர்சோலை டவுனுக்கு சென்றனர்.

அங்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொண்டு மீண்டும் காரக்குன்னு நோக்கி வந்தனர்.

நேற்றிரவு 8.30 மணிக்கு காரக்குன்னு அருகே உள்ள தேயிலை எஸ்டேட் அருகே 2 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நடமாடி கொண்டிருந்தது.

யானை நிற்பது அறியாமல் 2 பேரும் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் குடியிருப்பின் அருகே உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் இவர்கள் சென்ற போது இவர்களை யானை வழிமறித்து நின்றது.

யானை நிற்பதை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் அதற்குள்ளாகவே யானை 2 பேரையும் தூக்கி வீசி தாக்கியது.

இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.

குடியிருப்பில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி இவர்கள் இறந்து கிடந்த பகுதி இருந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் இவர்கள் இறந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை.

இன்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்காக தேயிலை தோட்டத்திற்கு வந்தனர்.

அப்போது அங்கு 2 பேரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு விட்டனர்.

மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஏராளமான மக்கள் திரண்டு உடலை எடுக்கவிடவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் யானை தாக்கி 2 பேர் இறந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு அருகே நடமாடும் யானையை அடர் வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News